Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 50% அரசு பேருந்துகள் இயங்கவில்லை கிராமப்புற பஸ்கள் அடியோடு முடங்கியதால் பயணிகள் பாதிப்பு

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக திருநெல்வேலியில் இருந்து தொலைதூர நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படாமல் வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.(வலது) தூத்துக்குடியில் இயங்காமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள். படங்கள்: மு. லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பேருந்துகள் நேற்று இயங்கவில்லை. கிராமப்பு றங்களுக்கு பஸ்கள் அடியோடு இயக்கப்படாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி

14-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்கள் உள்ளன. இந்த 3 மண்டலங்களில் உள்ள 24 பணிமனைகளில் இருந்து 1,985 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்தன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று 50 சதவீத பேருந்துகள் இயக்கப் படவில்லை. கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் பெருமளவுக்கு இயக்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பெரும் பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் அண்ணா தொழிற்சங்கத்தினரால் முக்கிய ஊர்களுக்கு மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 303 அரசு பேருந்துகள் உள்ளன. இதில் காலையில் 86 பேருந்துகள் மட்டுமே இயங்கின. மதியத்துக்கு பிறகு மேலும் சில பேருந்துகள் கூடுதலாக இயங்கத் தொடங்கின. மொத்தம் 94 பேருந்துகள் (31 சதவீதம்) இயங்கின. 69 சதவீத பேருந்துகள் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நகரப் பேருந்துகளை தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள் விரைவில் பணியமர்த்தப்பட்டு, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பேருந்துகள் தடையின்றி இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று காலையில் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. வெளியூர் செல்வதற்காகவும், பணி நிமித்தமாக வந்தவர்களும் பேருந்து இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்துகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் தொமுச,சிஐடியு, எச்எம்எஸ், ஏஐடியுசி தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

35 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் பணியில் ஈடுபட்டு வருவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை. நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x