Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM
வேலூர்/திருப்பத்தூர்/ திருவண்ணாமலை
வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் இயக்கப் பட்டன. மாலை நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறை வாக இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 தொகையை அமைச்சர் தன்னிச்சையாக அறிவித்ததற்கு எதிராகவும், ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணபலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.
அதன்படி, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகள் தடையில் லாமல் இயக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற் கொண் டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், ஆற் காடு, சேண்பாக்கம், கிருஷ்ணா நகர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் உள் ளிட்ட போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து பேருந்துகள் வெளியே செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லாததால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, மாலை நேரங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தொமுச பொதுச்செயலாளர் (நிர்வாகம்) பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 700 பேருந்துகள் உள்ளன. 4,200 பேர் வேலை செய்து வருகின்றனர். இதில், 5 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. தொழிலாளர்கள் இல்லாமல் பணிமனைகளில் பேருந்துகள் முடங்கின. ஆனால், எண்ணிக்கையை அதிகரித்து காட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்’’ என்றார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் நேற்று காலை 11 மணிக்குப் பிறகு பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்பியுள்ளன. பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் எண்ணிக்கையை கூட்ட ஒரு டிரிப் மட்டும் இயக்கப்பட்டு மற்றொரு பேருந்து என மாறி மாறி இயக்கிவிட்டு நிறுத்தியுள்ளனர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கணக்குப்படி சுமார் 150 பேருந்துகள் இயக்கியதாக கூறியுள்ளனர் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். போராட்டம் தொடரும் என்று அறி வித்துள்ளதால் ஓரிரு நாட்களுக்கு அரசு பேருந்து சேவையில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, வேலூர், சென்னை, குப்பம் மற்றும் ஓசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 174 அரசு பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.போக்குவரத்து தொழி லாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் கோட் டத்தில் 25 பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் 15 பேருந்துகள் என 40 பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. இதனால், போதுமான பேருந்து வசதி இல் லாததால் திருப்பத்தூர் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது.
தனியார் பேருந்துகள்
கரோனா காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது, பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு, அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தம் கைகொடுத் துள்ளது.இதனால், டைமிங் முறை என எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தனியார் பேருந்துகள் நேற்று தொடர்ந்து இயக்கப்பட்டன. இது ஓரளவுக்கு பொதுமக்களுக்கு கைகொடுத்தது. அரசு பேருந்துகள் இல்லாததால் கிராமப்புறங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. ஒரு சில வழித்தடங் களில் கூடுதல் கட்டணமும் வசூலிக் கப்பட்டது. அதேபோல, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதி களில் ஆட்டோ, கால் டாக்ஸிகளில் ஏராளமானோர் பயணம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை
தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதனால், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்ப வர்கள், வணிகர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அரசுக்கு ஆதரவான தொழிற்சங்களைச் சேரந்தவர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தி.மலை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட 10 பணிமனைகளில் இருந்து சுமார் 550 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில், சுமார் 30 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கோரிக்கை களை வலியுறுத்தி பணி மனைகள்முன்பு தொமுச உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT