Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

புதுச்சேரி, காரைக்காலில் அங்கன்வாடிகளில் இனி வாரம் 3 முட்டைகள் ஆளுநர் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களில் உள்ளஅங்கன்வாடிகளில் இனி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியை நீக்கிவிட்டு, தமிழி சையை அப்பொறுப்புக்கு நிய மித்தது முதல் அவர் தொடர் ஆய்வுகளையும், பல்வேறு நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளார்.

ஆளுநர் மாளிகையைச் சுற்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, இலவச பேருந்து வசதி, ரேஷனில் இலவச அரிசி தருவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளார்.

அண்மையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் தர உத்தரவிட்டு, அப்பெண்ணின் குழந்தைகளுக்கு கல்வித் தொகையை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு செய்த தமிழிசை, நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். அதன் விவரம்:

மத்திய அரசு நிதி உதவியுடன் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது. அக் குழந்தைகளின் புரதச் சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இனி வாரம் 3 முட்டைகள் தர உத்தரவிடப்படுகிறது. அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர்.

இப்பணிக்காக புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.68 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பை பலர் வரவேற்றாலும், பணியாளர் ஊதியச் சிக்கலால் பல இடங்களில் மூடப்பட்டிருக்கும் அங்கன் வாடி மையங்களையும் திறக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் 28 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x