Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
ரைஸ் புல்லிங் கலசம் விற்பனை செய்வதாக பணமோசடி செய்த புகைப்படக் கலைஞரை, பாதிக்கப்பட்டவர்கள் கடத்த, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன். இவர் சினிமா புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். ஆயிரம்விளக்கு பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். கரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் சரியாகத் தொழில் நடக்காததால் போட்டோ ஸ்டுடியோவை மூடிவிட்டார். பின்னர் பைனான்ஸ் தொழிலும் புராதனப் பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் ஓர் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நேரத்தில் நியூட்டனுக்கு பெங்களூரைச் சேர்ந்த மேத்யூ என்பவர் பழக்கமானார். சிறிய பித்தளைக் குடங்களில் சில தந்திர வேலைகளைச் செய்தால் ரைஸ் புல்லிங் கலசம் போல் மாற்றிப் பலரிடமும் விற்று கோடிக்கணக்கில் காசு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றும் பலரிடமும் சதுரங்க வேட்டை படத்தில் வருவதுபோல பெரிதாக ரைஸ் புல்லிங் கலசம் பற்றிச் சொல்லி ஆசையைத் தூண்டியுள்ளார். அந்த கலசம் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும், லட்சத்தில் வாங்கினால் கோடியில் புரளலாம் எனக்கூறி 21 பேரிடம் 57 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பணத்தைப் பெற்ற நியூட்டனும், மேத்யூவும் ரைஸ் புல்லிங் கலசத்தை தராததால் பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர்.
பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட விக்கி, சதீஷ், திலீப், கவுதம், சுனில் ஆகிய 5 பேர் நியூட்டனிடமும், மேத்யூவிடமும் ரூ.37 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து நியூட்டனை அவர்கள் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பின்னர் நியூட்டனையும் அவரது நண்பர் ராகுஜியையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தரும்படி நியூட்டனின் மனைவி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அசோக் நகர் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இந்நிலையில் நியூட்டன் தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தியுள்ளார்கள் என்றும் ரூ.30 லட்சம் பணம் கொடுத்து தன்னை மீட்கும்படி கேட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பயந்துபோன நியூட்டனின் குடும்பத்தார் போலீஸாரிடம் முறையிட, கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீஸார் திட்டம் போட்டனர்.
பணம் கொடுப்பதாகக் கூறி, அவர்களை வரவழைத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். நியூட்டன், அவரது நண்பர் ராகுஜி ஆகியோரை மீட்டனர். கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT