Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்ததாக கூறும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலப்பட்டி ஊராட்சி 5-வது மைல் பகுதியில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசியதாவது:
திமுக ஆட்சியில் சோழையாறு அணை, பொன்னியாறு அணை, பெரியாறு அணை, எருக்கன்பட்டி அணை என பல அணைகளை கட்டி நவீன கரிகால சோழனாக இருந்தவர் கருணாநிதி.
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட பென்னையாற்று தடுப்பணை இடிந்து விழுந்ததே, இது ஊழல் ஆட்சிக்கான எடுத்துக்காட்டு. பெயரளவில் அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த அரசு, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
கிருஷ்ணகிரி அணை ஷெட்டர் உடைந்து, அதுவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை தடுப்பணை கடந்த 2005-ம் ஆண்டு இடிந்து விழுந்து, அதை சரி செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ள அரசின் முறைகேடுகளை இதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளலாம்.
“தமிழகத்தில் 8 அணைகள் கட்டப்படும்’ என முதல்வர் கூறினார். இன்று வரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்ததாக கூறும் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றம் சரியான சட்ட வழிமுறைகளை தெரிவித்தும், அதை பின்பற்றாததால் 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்.
முதல்வரின் தொகுதி தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என பார்த்தால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாகுறை, அடிப்படை வசதியில்லை. மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் இல்லை. பூலாம்பட்டியை சுற்றுலா தலமாக்குவோம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜவுளி பூங்கா, மாம்பழ கூழ் ஆலை என எந்த திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT