Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து மத்திய மண்டலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக திருச்சி மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம் ஆகியன சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் ந.தியாகராஜன் (வடக்கு), க.வைரமணி (மத்திய), எம்எல்ஏ-க்கள் அ.சவுந்திரபாண்டியன் (லால்குடி), எஸ்.ஸ்டாலின் குமார் (துறையூர்), மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பா.பரணிகுமார், அன்பில் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது:

அதிமுக அரசு அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. ஆளும்கட்சியினர் தான் அதிகம் பயனடைந்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் வாக்குறுதிகளைத்தான் முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆட்சியில் இல்லையென்றாலும், அதிமுக ஆட்சியை இயக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழர்களைப் புறக்கணித்த அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட ஆரம்ப கட்ட பணிகளை செய்தது முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு தான். வாய்க்காலுக்கு நிலம் கையகப்படுத்துவதற்குள் ஆட்சி முடிந்துவிட்டது. இந்தத் திட்டத்தை தேர்தல் ஆதாயத்துக்காகவே தற்போது தொடங்கி வைத்துள்ளனர் என்றார்.

இதேபோல, திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்தப் போராட்டத்தில் மாட்டுவண்டி மீது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, அதற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில், கவிஞர் சல்மா, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ ராமர், மாநில விவசாய அணிச் செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் கே.மணி, வழக்கறிஞர் மணிராஜ், நகரச் செயலாளர் எஸ்.பி. கனகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கே.கருணாநிதி, எம்.ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மோட்டார் சைக்கிள், காஸ் சிலிண்டர்கள் ஏற்றிய மாட்டு வண்டியை மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ ஓட்டி வந்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம்.பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்டப் பொருளாளர் செ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, நகரச் செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார். சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகரச் செயலாளர் கே.நைனாமுகமது, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு, மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, அறந்தாங்கியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், தேர்தல் பணிக்குழு செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் என்.கவுதமன் தலைமை வகித்தார். இதில், எம்எல்ஏ மதிவாணன், விவசாய அணி இணைச் செயலாளர் வேதரத்தினம், தீர்மான குழு உறுப்பினர் காமராஜ், நகரச் செயலாளர் போலீஸ் பன்னீர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன், மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையிலும், நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜ் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில் எம்பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x