Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர், திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப் படியுடன்கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வீதம் பணிக் கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.சித்ரா, பொருளாளர் எஸ்.ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 1,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, “எங்களை அரசு ஊழியர்களாக்குவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அவர் மறைந்து 4 ஆண்டுகளாகியும், அந்தக் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காததால் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றனர்.
இதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் பேராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத்தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் என்.சாந்தி, மாவட்டப் பொருளாளர் கே.கலா விளக்க உரையாற்றினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேனகா தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சந்திரா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வி.மலர்விழி உள்ளிட்டோர் பேசினர். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலை போலீஸார் அகற்றினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT