Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ஆட்சேபகர மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைபடுத்தி பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT