Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ.2 கோடி செலவில் வெப்ப மண்டல பழங்களுக்கான சிறப்பு மையத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அண்மையில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா கூறியது: வெப்பமண்டல பழங்களை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு உதவிடும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பமண்டல பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் நேரில் பார்வையிட ஏதுவாக இந்த மையத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் வெப்பமண்டல பழப் பயிர்களான மா, எலுமிச்சை, கொய்யா, பலா மற்றும் பப்பாளி போன்ற முதன்மை பயிர்களும், மாதுளை, விளாம்பழம், வில்வம், நாவல், நெல்லி, சீத்தாப்பழம், களாக்காய் மற்றும் கொடுக்காய்புளி போன்ற சிறுவகை பழப்பயிர்களும் நடவு செய்யப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
நிழல்வலை கூடாரங்களில் குழித்தட்டு நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பப்பாளி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.
மண்புழு உரம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் உற்பத்தி மார்ச் மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட்டு, விநியோகிக்கும் பணி நடைபெறும்.
மேலும், உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகிய வற்றை தயாரிக்க தேவையான இடுபொருட்கள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT