Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM
ஈரோடு, நாமக்கல் மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் ரூ.36.98 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ.9 லட்சமும் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. நிதியைப் பெற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
தமிழகத்திலேயே ம.தி.மு.க. மட்டும் தேர்தல் நிதியை வசூல் செய்கிறது. மற்ற கட்சிகளுக்கு நிதி குவிகிறது. இதற்கு காரணம் மக்களிடம் ம.தி.மு.க.வுக்கு உள்ள நம்பிக்கையை வெளிகாட்டுகிறது. நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் நேர்மையானவர்கள், தமிழர்களின் நலனுக்காக பாடுபடுபவர்கள் என்பதால் மக்கள் நமக்கு நிதி கொடுக்கின்றனர்.
தமிழக அரசியலில் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது என மக்களவைத் தேர்தலில் இருந்தே முடிவு செய்யப்பட்டு விட்டது. திராவிட இயக்கத்தை தகர்க்க இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்கிறது. இதைத்தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற் காக தற்போது பல்வேறு கட்சிகள் அணிகளை உருவாக்கி வருகின்றன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மதிமுக போராட்டம் நடத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராகவும், 7 பேரின் விடுதலைக்காகவும் போராடியதுடன், அவர்களது தூக்குகயிறு அறுபடவும் வைத்து நாம் வெற்றி கண்டுள்ளோம், என்றார்.
நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு, கந்தசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT