Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM
காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீரைக் கலக்கும் சாய, சலவை ஆலை உரிமையாளர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், என காலிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி வரை 90 கிலோ மீட்டர் தூரம் வரை காலிங்கராயன் கால்வாய் நீண்டுள்ளது. இதில், மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதியில் காலிங்கராயன் கால்வாயில், சாயக்கழிவுநீர் அதிக அளவில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாடு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 30-க்கும் மேற்பட்ட சாய, சலவை ஆலைகள், தங்கள் கழிவுநீரை குழாய்கள் மூலம், காலிங்கராயன் கால்வாயில் நேரடியாகக் கலப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த ஆலைகளின் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டு, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. ஆனால், சீல் வைக்கப்பட்ட சில மணி நேரத்தில், அதனை பிரித்த ஆலை நிர்வாகத்தினர், ஜெனரேட்டர்கள் உதவியுடன் ஆலைகளில் பணிகளை மேற்கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் புகாரையடுத்து, இரண்டு ஆலைகள் மீது மொடக்குறிச்சி காவல்துறையினர்குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், மொடக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ சிவசுப்ரமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காலிங்கராயன் கால்வாய்க் கரையோரங்களில் அமைந்துள்ள சாயம் மற்றும் சலவை ஆலைகள் தொடர்ந்து சாயக்கழிவு நீரை கால்வாயில் திறந்து விடுவதைத் தவிர்த்திடும் வகையில் கரையோரங்களிலுள்ள ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், சாயக்கழிவு நீரைத் திறந்து விட்டு கால்வாயை மாசுப்படுத்தும் ஆலை உரிமையாளர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
கால்வாயில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் தள்ளியே சாய, சலவை ஆலைகள் இயங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அதுவரை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கோட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT