Published : 12 Feb 2021 03:18 AM
Last Updated : 12 Feb 2021 03:18 AM

நாங்குநேரியில் லட்ச தீப மஹோத்ஸவம் நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபம்

நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற லட்சதீப மஹோத்ஸவ விழாவை முன்னிட்டு, கோயில் முழுக்க ஒளிரும் வண்ணவிளக்குகளின் ஒளி, பெரியகுளம் தண்ணீரில் பிரதிபலிக்கிறது.(வலது) திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நேற்றிரவு நடைபெற்ற பத்ர தீபத்திருவிழாவைக் காண திரண்டிருந்த பக்தர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

தை அமாவாசையை முன்னிட்டு நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் எண்ணெய்க்காப்பு மற்றும் லட்ச தீப மஹோத்ஸவ விழா நேற்று நடைபெற்றது. நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் தொடங்கிய லட்சதீப விழாவில், அன்று காலை கும்பாபிஷேகம், சாத்துமுறை, இரவில் பலி மண்டபத்துக்கு பெருமாள், தாயார் புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை 7.30 மணிக்கு கும்பம் சுற்றிவருதல், 9.30 மணிக்கு எண்ணெய்க்காப்பு, 11.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பு சேவை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு கோயில் முழுவதும் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, பெருமாளும், தாயாரும் புறப்பாடு கண்டருளினர். இரவு 1 மணிக்கு கருட சேவை நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு 108 கலச திருமஞ்சனம், இரவு 10 மணிக்கு புஷ்பயாகம் நடைபெறுகிறது. நாளை (13-ம் தேதி) மாலை 4 மணிக்கு பெருமாள், தாயார் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 14-ம் தேதி மாலை 4 மணிக்கு பெருமாள், தாயார், மணவாளமாமுநிகள் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு மூவரும் தெப்பத்துக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத்திருவிழா 9-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் வைபவம் நடைபெற்றது. நேற்று காலையில் பால்குட ஊர்வலம், மாலை 6 மணிக்கு கோயிலில் சந்நிதிகள் மற்றும் பிரகாரங்களில் தங்க விளக்கிலிருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இரவில் சுவாமி அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதியுலா நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x