Published : 11 Feb 2021 03:14 AM
Last Updated : 11 Feb 2021 03:14 AM
சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்து 8 மாதங்களாகியும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வழங்கப்படாதது குறித்து, ஜெயராஜின் மகள் பெர்சி வேதனை தெரிவித்தார். ஆய்வு முடிவுகளை அளிக்குமாறு கேட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் நேற்று அவர் மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் இருவரின் பிரேத பரிசோதனைகள் ஜூன் 24-ம்தேதி நடைபெற்றது.
பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கை குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. அறிக்கையைக் கேட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஜெயராஜின் மகள் பெர்சி நேற்று மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எனது சகோதரர் பென்னிக்ஸ் , தந்தை ஜெயராஜ் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது உடற்கூறு ஆய்வு முடிந்து 8மாதங்கள் கடந்து விட்டது. வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த விசாரணை வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு உடற்கூறு ஆய்வு முடிவு அறிக்கை தேவைப்படுகிறது.
உடற்கூறு ஆய்வியல் துறையில் அறிக்கை குறித்து கேட்டால், முறையான பதில் தர மறுக்கிறார்கள். உடற் கூறு ஆய்வு அறிக்கை பெறு வதற்கான மனுவையே வாங்க மறுக்கிறார்கள். எனவே, வேறு வழியின்றி உடற்கூறு ஆய்வறிக்கை கேட்டு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். அறிக்கையை வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT