Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
மொடக்குறிச்சி தொகுதியில் சீல் வைக்கப்பட்ட சாய, சலவை ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயம் மற்றும் சலவைப் பட்டறை ஆலைகள், ரகசிய குழாய்கள் அமைத்து, அதன் மூலம் நேரடியாக காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீரை திறந்து விடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காலிங்கராயன் கரையோரப் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இதில், மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதிகளில் குழாய்கள் பதித்து சாயக்கழிவு நீர் கால்வாயில் திறந்து விட அமைக்கப்பட்ட குழாய்கள் கண்டறியப்பட்டன. இப்பகுதியில் செயல்படும் சாயம் மற்றும் சலவைத் தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் சுத்திகரிப்பு செய்யாமல், சாயக்கழிவு நீரை நீர் நிலைகளில் திறந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டின் பேரில், 20-க்கும் மேற்பட்ட ஆலைகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.
ஆனால் சீல் வைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சாயப்பட்டறை ஆலை நிர்வாகத்தினர், ஆலையைத் திறந்து பணிகளைத் தொடங்கியுள்ளனர். ஜெனரேட்டர் உதவியுடன் இரவு முழுவதும் பணிகள் நடைபெறுவதாகவும், கழிவுநீர் மீண்டும் காலிங்கராயன் கால்வாயில் திறக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து காலிங்கராயன் கால்வாய் பாசன விவசாயிகள் சபையினர், ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயக்கழிவு நீரை கால்வாயில் திறந்து விட்டு மாசு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு சீல் வைப்பதோடு, ஆலை நிர்வாகத்தினர் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சாயக்கழிவு நீர் கால்வாயில் கலக்காமல் இருப்பதற்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT