Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் நெல்லையப்பர் கோயில் யானை ‘காந்திமதி’க்கு கரோனா பரிசோதனை

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை `காந்திமதி’க்கு, கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற இருக்கும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை `காந்திமதி’க்கு கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில், ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான முகாம் வரும் 8-ம் தேதி தொடங்கி 48 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கும், அவற்றுடன் செல்லும் பாகன்கள், பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் உள்ள யானை `காந்திமதி’க்கு ஆர்டிபிசிஆர் எனப்படும் கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலியிலுள்ள தனியார் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் காந்திமதி யானையின் தொண்டை பகுதியில் இருந்தும், தும்பிக்கையிலிருந்தும் சளி மாதிரிகளை சேகரித்தனர்.

இதுபோல், யானை பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார் மற்றும் யானையுடன் செல்லவுள்ள 3 பணியாளர்களுக்கும் திருநெல்வேலி பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.

நலவாழ்வு முகாமுக்கு யானை `காந்திமதி’ லாரியில் இன்று அழைத்து செல்லப்படுகிறது. இதற்காக, திருநெல்வேலி மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் லாரியில் ஏறி, இறங்குவதற்கான பயிற்சி `காந்திமதி’க்கு அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x