Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

ஈரோடு மாநகராட்சியில் ரூ.484 கோடி மதிப்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள 1.14 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு ரூ.484 கோடி மதிப்பில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் மாநகர மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசுபடிந்து காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில், காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கும் வகையில், ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் அப்போதைய மாமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்தது. இத்திட்டத்தில் காவிரியில் இருந்து குழாய்கள் மூலமாக சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கும், ஈரோடு வ.உ.சி.பூங்காவில் கட்டப்பட்டுள்ள 1.14 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து மாநகராட்சியில் 21 புதிய மேல்நிலை தொட்டிகள், 46 பழைய குடிநீர் தொட்டிகள் மூலம் 1.30 லட்சம் வீடுகளுக்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படவுள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஊராட்சிக் கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபோல் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் எம்ஜிஆர் நகரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.17.28 கோடி செலவில் கட்டப்பட்ட 192 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x