Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
கோபியை அடுத்த வெள்ளாங்கோயில் கோராக்காட்டூர் அருட்கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோயில் கோராக்காட்டூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட்கரியகாளியம்மன்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா, ஜனவரி 20-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடந்து கடந்த 1-ம் தேதி கிராமசாந்தியும், 2-ம் தேதி கொடியேற்றம் சந்தனகாப்பு மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது.
நேற்று முன் தினம் (3-ம் தேதி) குண்டம் திறப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. நேற்று அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமை பூசாரி சண்முகம் முதலில் குண்டம் இறங்கினார். பின்னர் பூசாரிகள், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 18 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சில பெண் பக்தர்கள் அக்னி சட்டியுடனும், அழகு குத்தியும், கைகளில் வேப்பிலை ஏந்தியும் குண்டம் இறங்கினர். குண்டம் திருவிழாவையொட்டி அருட்கரியகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குண்டம் திருவிழாவில் இன்று (5-ம் தேதி) தேர் உற்ஸவ நிகழ்ச்சியும், நாளை முத்துப்பல்லக்கு, கரகாட்டம், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT