Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
`செங்கோட்டை- திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில்வே வழித்தட மின்மயமாக்கும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்’ என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் மதுரை - மானாமதுரை, சேலம் - கடலூர், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுர், ஷோரனுர் - நிலாம்பூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ஆகிய வழித்தடங்களில், ரூ. 587.53 கோடி மதிப்பீட்டில், 985 கிமீ நீளத்துக்கு மின் மயமாக்கல் பணிக்கு, கடந்த 2019- ம் ஆண்டு ஜனவரி மாதம் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பாவூர்சத்திரம் பாண்டியராஜா என்பவர், ரயில்வே துறையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அதிகாரிகள் அளித்துள்ள பதில்:
செங்கோட்டை - திருநெல்வேலி வரையான 72 கிமீ, திருநெல்வேலி - திருச்செந்தூர் வரையான 61 கிமீ ரயில் தடங்களில் மின் மயமாக்கல் பணி, அடுத்தாண்டு மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில் 21.6 மெகாவாட் கொண்ட துணை மின் நிலையங்கள் வீரவநல்லூர் மற்றும் ஆறுமுகனேரியில் அமைக்கப்படும். விருதுநகர் - தென்காசி தடம் (122 கிமீ) அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் மின் மயமாக்கல் பணி முடிக்கப்படும்.
ஜனவரி 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்படும்போது 30 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 2022 ஜூலையில் முடிக்கப்படவேண்டும். கரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் பணியில் தடங்கல் ஏற்பட்டதால் 2 மாதங்கள் தாமதமாக செப்டம்பரில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT