Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவுக்கு ஏஐடியுசி கண்டனம்

ஈரோடு

மத்திய அரசின் படஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு ஏஐடியுசி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன (ஏஐடியுசி) மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சம்மேளன செயலாளர் ஆர்.மணியன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் உள்ளாட்சித் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.ராதாகிருஷ்ணன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் என்.சேகர் ஆகியோர் பேசினர்.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சித் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது, சம வேலைக்கு சம ஊதியம்வழங்குதல், ஒப்பந்த அடிப்படையிலான பணிகளைக் கைவிடுதல், பழைய ஓய்வூதியத் திட்டம், தினக்கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.

எழுச்சிப் பேரணி

தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ.1000 ஊதிய உயர்வு அறிவித்த தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 6-ம் தேதி திருச்சியில் ஏஐடியுசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனத்தின் சார்பில் எழுச்சிப்பேரணி நடைபெறும்.

மத்திய பட்ஜெட்டில், எல்ஜசி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் இந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் - டீசல், விவசாயத்தின் பெயரில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதையும், பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவித்துள்ளதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x