Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

குடிநீர் தட்டுப்பாட்டால் அத்தாளநல்லூர் மக்கள் தவிப்பு கருப்பு துணியால் கண்களை கட்டி வந்து ஆட்சியரிடம் முறையீடு

குடிநீர் பிரச்சினை தொடர்பாக கண்களில் கருப்பு துணி கட்டியபடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அத்தாளநல்லூர் பகுதி மக்கள். (அடுத்த படம்) தேவாரம், திருவாசகத்தை இழிவுபடுத்துவதாக புகார் அளித்த சிவனடியார்கள். (கடைசி படம்) நம்பி திருக்கோயிலில் அன்னதானம் வழங்க அனுமதி கோரிய பக்தர்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அத்தாளநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்களில் கருப்புதுணி கட்டியபடி வந்து அளித்த மனுவிவரம்: அத்தாளநல்லூர் ஊராட்சியில் 3 குக்கிராமங்கள் உள்ளன.இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் சேதமடைந்தன. அவற்றை சரிசெய்யாததால் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. குடிநீர், தெருவிளக்கு வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னதானம்

பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பா. கார்த்திக் தம்பான், தச்சநல்லூரைச் சேர்ந்த கோகுலம் பஜனை குழு மற்றும் அன்னதான கமிட்டியைச் சேர்ந்த வி.மாசானம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “ திருக்குறுங்குடி மலைமேல் அமைந்திருக்கும் திருமலை நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி சனிக்கிழமை அன்னதானம் வழங்கி வருகிறோம். இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மாதம் முதல் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. எனவே, திருமலை நம்பி திருக்கோயிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் டிகேபி ராஜாபாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் முன் அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பாக 100 மீ சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் இடுகாடு மற்றும் சுடுகாட்டை மத பாகுபாடு இல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனடியார்கள்

பாளையங்கோட்டை கோமதிஅம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரர் கோயில் சிவனடியார்கள் சார்பில் என்.தியாகராஜன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “தேவாரம்,திருவாசகம், திருச்சிற்றம்பலம் என்ற புனித வார்த்தைகளை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ள சென்னையைச் சேர்ந்த சிவகுமார் என்ற சிவயோகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அரசின் இலவச மடிக்கணினி கேட்டு பல்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x