Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்பி ஜெயக்குமார் பேசியதாவது:
பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு சென்று போக்ஸோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், காவல்துறையின் உதவியை நாடுவதற்கான ‘காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி' பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண் 1091 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண் 1098 பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் போக்ஸோ வழக்கு குற்றவாளிகள் 3 பேர், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தவர்கள் 2 பேர் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 17 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்த மாதம் மட்டும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 499 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ரவுடித்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிக்கள் கணேஷ், பொன்னரசு, பிரகாஷ், காட்வின் ஜெகதீஷ்குமார், கலைக்கதிரவன், சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment