Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் விமர்சையாக நடந்தது சென்னிமலை தைப்பூசத் தேரோட்டம்

ஈரோடு

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடந்தது.

கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம், கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதர் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நேற்று இரவு நடந்தது.

நேற்று அதிகாலை முருகன் - வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கைலாசநாதர் கோயிலில் இருந்து உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

தங்ககவச அலங்காரம்

நேற்று காலை 6 மணியளவில் அமர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேத முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்திலும், விநாயகர் மற்றும் நடராஜர் திருத்தேரில் எழுந்தருளினார். கோயில் தலைமை குருக்கள் ராமநாத சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்று சுவாமி தரிசனம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கேஎஸ்.தென்னரசு, தனியரசு ஆகியோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைக்காய், நெல் தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

மகா தரிசனம்

இன்று ராஜ வீதியில் உலா வரும் திருத்தேர் நாளை (29-ம் தேதி) மாலை நிலை சேர்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி (திங்கள்) இரவு 7 மணி அளவில் மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா, பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரோனா கட்டுப்பாடு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தேரோட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி முருகன் கோயிலில் நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x