Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM
ஈரோடு நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 415 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது என மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.
ஈரோட்டில் இரு நாட்களுக்கு முன்னர் நடந்த பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை, போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். காண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொலைக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்பி தங்கதுரை கூறியதாவது:
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேகா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செந்தில்குமார் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த வீட்டருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில், அவரது உருவம் பதிவாகி இருந்ததால், குற்றவாளியை விரைந்து கைது செய்ய முடிந்தது. குற்றச்சம்பவங்களை தடுக்க "மூன்றாவது கண்" என அழைக்கப்படும் சி.சி.டி.வி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு கேமராக்களின் பயன்பாடு முக்கியமானதாக மாறியுள்ளது.
ஈரோடு நகரில் முக்கிய சாலை மற்றும் சாலை சந்திப்புகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே 320 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன .இந்நிலையில், கூடுதலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 415 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். சி.சி.டி.வி கேமராக்களின் பயன்பாடு மிக அத்தியாவசியமானது என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் அவசர நேரங்களில் போலீஸாரை அணுகுவதற்கு காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி உள்ளது. இதைப் பெண்கள் தங்களது ஸ்மார்ட் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அவசர தேவைக்கு காவல்துறையை அழைக்கலாம். மேலும், அவசர உதவிக்கு 100-க்கு தொடர்பு கொள்ளலாம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT