Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

பொங்கல் போனஸ் கேட்டு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் முறையீடு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச் சங்கத்தினர். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச் சங்கத்தினர் மாநில துணை அமைப்பாளர் எஸ்.என். முருகன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனு:

பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் ரூ.4 ஆயிரம் அளிக்க வேண்டும். பணிமூப்பு ஊதிய பயன் உடனே கிடைக்கச் செய்ய வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்.

ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து பயன்பெற உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்குக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் தமிழர் விடுதலை கொற்றம் தலைவர் அ. வியனரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு நிர்வாகி அ. பீட்டர் உள்ளிட்டோர் அளித்த மனு:

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டு 67 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் நூற்றுக்கணக்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாளை தமிழுணர்வு சூளுரை நாளாக அறிவிக்க வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசு அலுவலக பெயர் பலகைகள், அரசு அறிவிப்புகள், விளம்பரங்கள், ஏல விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளையும் தமிழ் மொழியில் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x