Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

மழைக்காலத்தில் சகதி, வெயில் காலத்தில் தூசு நெல்லையில் தரமற்ற சாலைகளால் அவதி

திருநெல்வேலியில் புழுதி மயமாக காட்சியளிக்கும் சுவாமி நெல்லையப்பர் கோயில் நெடுஞ்சாலை. (அடுத்த படம்) முற்றிலும் பெயர்ந்து கிடக்கும் திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலை. படங்கள் :மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன.

திருநெல்வேலி மாநகரில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளும் சேதமடைந்து, தகுதியற்ற நிலையில் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பட்டியலில் திருநெல்வேலியும் இடம்பெற்றுள்ள நிலையில், இங்குள்ள சாலைகளின் தரம் படுமோசமாக உள்ளது.

திருநெல்வேலி டவுனில் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியிருக்கின்றன. கடந்த பல மாதங்களாகவே இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பேட்டைக்கு செல்லும் சாலை, நயினார்குளம் சாலை என, அத்தனை சாலைகளும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன.

மழைக் காலத்தில் இந்த சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியிருந்த நிலையில், தற்போது வெயில் அடிக்கும்போது சாலைகள் முழுக்க புழுதிகிளம்புகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் இந்த சாலைகளில் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் இச்சாலைகளில் சென்று வருகின்றனர். புழுதி மண்டலத்தால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

பழுதாகி கிடக்கும் சாலைகளில் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் விபத்துகளும் தினசரி ஏற்பட்டு வருகின்றன. சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் காவல்துறையும், போக்குவரத்து துறையும் கவனம் செலுத்தியிருக்கும் வேளையில், தரமற்ற சாலைகளால் வரும் ஆபத்துகள் குறித்தும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x