Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

அருணை தமிழ் சங்கம் சார்பில் 4 சாதனையாளர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கவுரவிப்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற அருணை தமிழ் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழிகளை வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. அருகில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

அருணை தமிழ் சங்கம் சார்பில் சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வழங்கி கவுரவித்தார்.

அருணை தமிழ் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். அருணை சகோதரிகள் சாரதா, பரமேஸ்வரி குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. மாணவி சரண்யாவின் பரதநாட்டியம் மற்றும்  கிருஷ்ணா கட்டக்கூத்து குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நூற்றாண்டு விழா நாயகர் உவமைக் கவிஞர் சுரதாவின் உருவப் படத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். பின்னர், கவிஞர் சுந்த ரேசன் தலைமையில் சங்க இலக்கி யத்தில் அதிகம் பேசப்படுவது காதலா? வீரமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதன் பிறகு, ராஜலட்சுமி செந்தில் கணேஷ் குழுவினரின் நாட்டுப்புற ஆடல், பாடல் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தி.மலை கண்ணனுக்கு மறைமலை அடிகளார் விருது, திருவண்ணாமலை கண்ணகிக்கு டாக்டர் முத்துலட்சுமி விருது, சேத்துப்பட்டு நாடக ஆசிரியர் பாலகிருஷ்ணனுக்கு கலைவானர் என்.எஸ்.கே. விருது, செங்கம் கிருஷ்ணமூர்த்திக்கு கிருபானந்த வாரியார் விருது மற்றும் தலா ரூ.25 ஆயிரம் பொற்கிழியை வழங்கி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “அருணை தமிழ் சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் விழா மூலம் தமிழ் உணர்வையும், தமிழையும் வளர்த்து கொண்டிருக்கிறீர்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மூலம் தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பு கிடைத்தது. தமிழில் அறிவியலும் உண்டு. 200 ஆண்டுகளுக்கு முன் அறிவியலில் கூறிய விந்தைகளை 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக தமிழில் கூறி யுள்ளனர். தமிழுக்கு மட்டும்தான் அனைத்து சிறப்புகளும் உண்டு.

இந்தியா முழுவதும் ஒரே மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதன் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் தமிழை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் அருணை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். விவேகானந்தர் கூறியது போல், சம காலத்திலேயே சக மனிதர்களுடன் வாழ்ந்து, தன்னோடு வாழும் மனிதனை ஒரு அங்குலமாவது உயர்த்த வேண்டும் என நினைப்பவர் எ.வ.வேலு. அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்றார்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பனமரத் துப்பட்டு ராஜேந்திரன், வசந்தம்கார்த்திகேயன், கிரி, சேகரன், அம்பேத்குமார், முன்னாள் நகராட்சிதலைவர் தரன், மருத்துவர் கம்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x