Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
தாமிரபரணியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கான 46 கூட்டுக் குடிநீர் திட்டங்களில், தற்போது 15 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று திருநெல்வேலியில் நடைபெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன், தலைமை பொறியாளர் பெ. மணிமோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஜனவரி 11 முதல் 14 வரை 4 நாட்களில் மட்டும் 374.3 மி.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் நிரம்பும் நிலையில் இருந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா ஆகிய அணைகள் ஜனவரி 11 முதல் 14 வரை பெய்த அதிக மழையால் முழு கொள்ளளவை எட்டின.
அதிகமான உபரி நீர் வெளியேற்றத்தால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயர்ந்ததாலும், கடனா நதி, சிற்றாறு, ராமநதி மற்றும் இதர கால்வாய்களின் வழியாக வந்த உபரி நீரும் இணைந்து 70 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது.
46 குடிநீர் திட்டங்கள் பாதிப்பு
இதனால் இந்த ஆற்றுப்படுகையில் உறை கிணறுகளை நீராதாரமாக கொண்டு செயல்படும் 46 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்து, தென்மாவட்டங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படும் குடிநீர் வழங்கும் பணி தடைபட்டது.இதையடுத்து 20 பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுக்கள் இம் மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு, புனரமைப்பு செய்திட தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 120 பொறியாளர்கள், புவியியல் வல்லுநர்கள் மற்றம் நீர் பகுப்பாளர்கள் மாவட்டங்கள் முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் பணி செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் முழுவதும் உள்ள 46 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் தற்போது 15 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மீதம் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நிர்ணயிக்கும் முழு அளவிலான 244 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT