Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு 90 சதவீத மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வருகை

பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் முகக்கவசம் அணிந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள்.(வலது) மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார். படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி /தென்காசி/தூத்துக்குடி/கோவில்பட்டி/நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 90 சதவீத மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.

கரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,12-ம் வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.

திருநெல்வேலி டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பில் 685 மாணவிகளும், 10- ம் வகுப்பில் 677 மாணவிகளும் படிக்கின்றனர். இதில் 90 சதவீத மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர்.

இப்பள்ளியில் சுகாதார வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.நாச்சியார், உதவி ஆசிரியர்கள் எஸ்.மலர்விழி, எஸ்.லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தென்காசி

இதுபோல் தென்காசி மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளுக்குச் சென்று தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

அவர் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 241 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் 38,078 மாணவ, மாணவிகளில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு வருகை தந்து்ளளனர்.

அரசு வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை, கைகளுக்கு கிருமிநாசினி மருந்து மற்றும் முகக்கவசம் வழங்குதல் என ஒவ்வொரு பணிக்கும் ஆசிரியர் குழு நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டு, சத்து மாத்திரை வழங்கி அப்போதே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு பள்ளிகள், 126 அரசு உதவி பெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 18 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 328 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

இவற்றில், மழைவெள்ளம் தேங்கியுள்ள 12 பள்ளிகள் தவிர 316 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 25,110 மாணவ, மாணவிகளில் நேற்று 17,746 பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். இது 70.70 சதவீதமாகும். 12-ம் வகுப்பில் மொத்தம் 20,700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 15,048 பேர் காலை முதலே உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இது 72.70 சதவீதமாகும். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். முதல் நாளில் கரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பொதுத்தேர்வு குறித்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 71 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 27 மெட்ரிக் பள்ளிகள், 4 சிபிஎஸ்இ பள்ளிகள் என 102 பள்ளிகள் உள்ளன.

இதில், 10-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 6,980 மாணவ, மாணவிகளில் 5,407 பேரும், 12-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 5,733 பேரில் 4,464 பேரும் வந்திருந்தனர். வகுப்பறைகளில் ஒரு பெஞ்சுக்கு 2 பேர் வீதம் அமர வைக்கப்பட்டனர்.

பள்ளிகளில் கரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர் அ.முனியசாமி, பள்ளித் துணை ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் கண்காணித்தனர். பள்ளி கல்வி இணை இயக்குநர் (தேர்வு துறை) பொன்குமாரும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கடியப்பட்டணம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x