Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வள்ளிநாயகம் (52), ஊர் தலைவராக இருந்தார். பொங்கலன்று வாறுகாலில் தண்ணீர் செல்வது தொடர்பாக இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் வெட்டுக் காயம் அடைந்தார்.
போலீஸார் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை வள்ளிநாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற வள்ளிநாயகம் மீண்டும் திரும்பவில்லை. இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் அவரது மகன் வேல்ராஜ் புகார் அளித்தார். அதில், 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், வள்ளிநாயகத் தின் இருசக்கர வாகனம் குன்னக்குடி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் கிடந்தது. அங்குள்ள முட்புதருக்குள் ரத்தக்காயங்களுடன் வள்ளி நாயகம் சடலமாகக் கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்த நல்லூர் போலீஸார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
3 பேர் சரண்
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்(22), மலர் மன்னன்(22), பிரவீன்குமார்(19) ஆகியோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.மூவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் சண்முகவேல்ராஜன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வள்ளிநாயகம் மகன் வேல்ராஜ் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT