Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகள் இன்று (ஜன.19) தொடங்கவுள்ளன.
இந்தநிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், பள்ளிகள் திறப்பு மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 4 பேரை அரசு அண்மையில் நியமித்தது.
இதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தின் அதிகாரியும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான இல.நிர்மல்ராஜ், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் கூறியது:
பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை. வருகைப் பதிவேடும் கிடையாது. ஆனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்தான் வர வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்குவது குறித்து அரசு பிறகு அறிவிக்கும் என்றார்.
ஆய்வின்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 503 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 75,000 மாணவ, மாணவிகள் உள்ளனர். அனைத்துப் பள்ளிகளும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்கள் அமர்வதற்கு தேவையான இடம் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சிங்க், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் தொடர்ந்து பள்ளிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசின் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் கோ.பாரதி விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT