Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, சிறுகிழங்கு பயிர்களுடன் நிவாரண உதவி கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மானூர் பகுதி விவசாயிகள். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர்மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மானூர் பகுதியில் பயிரிட்டிருந்த உளுந்து, பாசிப்பயறு, சிறுகிழங்கு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அறுவடை கட்டத்தில் பயிர்கள்முளைவிட்டதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகைவழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கமானூர் ஒன்றிய செயலாளர் டி.ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கீழமுன்னீர்பள்ளம் தெப்பக்குளத்தெரு பகுதி மக்கள் அளித்தமனுவில், ‘கழிவுநீர் செல்ல உரிய வசதி செய்துதர வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை இளங்கோநகர் கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு:

‘வண்ணார்பேட்டை இளங்கோநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லை.திறந்தவெளிகளை கழிப்பிடமாக்கி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மழையில் சேதமடைந்த மக்காச்சோளம், உளுந்து பயிர்களுடன் ஆட்சியர்அலுவலகத்துக்கு திரண்டு வந்துஉரிய நிவாரணம் வழங்கக் கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “திருவேங்கடம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடிசெய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, எள், மிளகாய் பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்து விட்டன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயறு வகைகள் செடியிலேயே முளைத்து வீணாகிவிட்டன. இதனால் கடும் இழப்புஏற்பட்டுள்ளது. பயிர் சேதத்தைஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

இதேபோல் ஊத்துமலை, மருக்காலங்குளம், பலபத்திரராமபுரம், அண்ணாமலைபுதூர், தங்கம்மாள்புரம், மேலக்கலங்கல், முத்தம்மாள்புரம், தட்டாப்பாறை, கீழக்கலங்கல், வேலாயுதபுரம், உச்சிப்பொத்தை, கங்கணாங்கிணறு, கருவந்தா, சோலைசேரி பகுதியில்மழையில் பயிர்கள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சேதமடைந்த பயிர்களுடன் வந்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x