Published : 18 Jan 2021 03:14 AM
Last Updated : 18 Jan 2021 03:14 AM
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ் வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்பத் திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்பு கேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைத் தெப்ப திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு தை தெப்ப திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.28-ம் தேதி வரை திருவிழா நடைபெறும்.
கொடியேற்றத்தையொட்டி, கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். அப்போது, கொடி மரத்துக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்மன் 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தனர். தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர்.
தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் ஜன.27-ம் தேதி நடைபெறும். அன்று இரவு 7 மணியளவில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகேயுள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT