Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் இல்லை, என குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சு.பு.ஆனந்த் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சு.பு.ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்ட முடிவில் ஆணைய உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவிய காலத்தில், தொற்றிலிருந்து குழந்தைகளைக் காக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவற்றில் ஈரோடு மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது.
கரோனா காலத்தில் குழந்தைத் திருமணத்தை தடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது, அவர்களை மீட்பது மற்றும் குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் தடுப்பது போன்றவை தொடர்பான நிலையான நடவடிக்கை நடைமுறையை தேசிய குழந்தைகள் காப்பகம் வெளியிடவுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 சதவீதம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்கியுள்ளது.
கடந்த மூன்று மாதத்தில் தேசிய அளவில் ஆணையம் சார்பில் 1600-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1450 வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் இல்லை.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் குழந்தைகள் நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நான்கு மகளிர் காவல்நிலையங்களில், விசாரணையின்போது குழந்தைகள் மனநிலை பாதிக்கப்படுவதைத் தடுக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாராட்டத்தக்கது, என்றார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எஸ்.பி. பி.தங்கதுரை, மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு செயலர் எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT