Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (12-ம் தேதி) நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். இதன்படி சேலம் சாலையை இணைக்கும் கோட்டை சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பரமத்தி சாலை வழியாக வாகனங்கள் சுற்றிச் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாவீர ஆஞ்சநேயர்
ஈரோடு வ .உ. சி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விழா நடத்துவது தொடர்பாக ஈரோடு கோட்டாட்சியர் சைபுதீன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி அனுமன் ஜெயந்தியான இன்று (12-ம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிகாலை 3 மணிக்கு மகா கணபதிக்கு அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு மலர் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு வடை மாலை சாத்துதல், மாலை 5 மணிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வுகளில் 50 முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம், திருவீதி உலா, தேர் இழுத்தல், வியாபார கடை அமைத்தல், பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, என கோயில் செயல் அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT