Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக் களை பெற பெரும்பாலான அரசுஉயர் அதிகாரிகள் பங்கேற்காத தால், மனுக்களை அளிக்க வரும்பொதுமக்கள் பெரும் ஏமாற்ற மடைந்ததாக குற்றஞ்சாட்டினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆட்சியர் சிவன் அருள் பல்வேறு பணிகள் காரணமாக வெளியே செல்ல நேரிடுவதால், அவரால் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதற்கு மாற்றாக மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தனித்துணை ஆட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், திட்ட இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, மனுக்களை பெற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தர விட்டிருந்தார்.
ஆனால், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் மட்டுமே கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். திருப்பத்தூர் சார் ஆட்சியர், தனித்துணை ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திட்ட இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாததால் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற முடியாமலும், அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி பெற முடியாமல் அரசு அலுவலர்கள் திணறி வருகின்றனர். மனு அளிக்க வரும் பொதுமக்களும் மனுக்களை யாரிடம் வழங்குவது என தெரியாமல் கூட்டரங்கில் பரிதவித்து வருகின்றனர்.
பொதுமக்களின் குறைகளை தீர்க்க வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காதது பெரும் வருத்தமளிக்கிறது. இதை தீர்க்க, வரும் வாரங்களில் ஆட்சியர் சிவன் அருள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங் களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நடைபெறுவதால் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே மனுக்களை அளித்து வருகின்றனர். திருப் பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி பகுதிக்கு உட்பட்ட மக்கள் மட்டுமே திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்களை அளிக்க வருகின்றனர்.
இதனால், கூட்டம் குறைவாக வருவதால் ஒரே இடத்தில் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்க முடியவில்லை. இது தவிர பல்வேறு பணிகள் காரணமாக உயர் அதிகாரிகளால் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்துக்கு வர முடியாமல் போகிறது. இனி வரும் வாரங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
5 இடங்களில் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் ஆகிய 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. இவற்றில் மொத்தம் 221 மனுக்கள் பெறப் பட்டன.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் தலைமை வகித்தார். இதில், நிலப்பட்டா, ஜாதிச்சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, இலவச மின் இணைப்பு, காவல் துறை பாதுகாப்பு, கல்விக்கடன் உள்ளிட்ட பொதுநல மனுக்களை டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியை யொட்டியுள்ள பாலாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தப்பட்டு வருகிறது. தினசரி 40 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகிறது. மேலும், சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடக்கிறது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் மாட்டு வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாகி உயிரிழந் தார்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியில் தங்கு தடையின்றி நடந்து வரும் மணல் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப் பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT