Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி பட்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கரூர் மாவட்டம் புகளூர் வரை 800 கிலோ வாட் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல மின்கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரங்களில் புதைவடக் கம்பி மூலம் உயரழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், உயர் மின்கோபுரங்களை தொடர்புடைய பவர் கிரிட் நிறுவனம் அமைத்தது. ஆனால், அறிவித்தபடி வழங்க வேண்டிய நிவாரணத் தொகை வழங்கப்படாமல் உள்ளது, என விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும், நில மதிப்பீட்டை உயர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கும், மின் கோபுரம் அமைக்கும்போது இருந்த பயிர்களுக்கும் இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், திருச்செங்கோடு அருகே உள்ள பட்லூர், சாலைப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பி. பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நில மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT