Published : 10 Jan 2021 03:30 AM
Last Updated : 10 Jan 2021 03:30 AM
திருவண்ணாமலையில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங் கேற்கும் இளைஞர்கள், 96 மணி நேர கரோனா சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “தி.மலையில் நடைபெற உள்ள ராணுவப் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு செய்து வருகி றது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள ராணுவப் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க திருவண் ணாமலை, வேலூர், கடலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் வரும் 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதி அட்டை அனுப்பப்படும்.
ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் இளைஞர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒரு குழுவில் உள்ள 500 இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும் போது, மற்ற இளைஞர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள்.
ராணுவப் பணி ஆள்சேர்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்கள் அனைவரும் 96 மணி நேரத்துக்குள் (4 நாட்களுக்குள்) கரோனா நெகட்டிவ் என சான்றிதழை கட்டாயம் பெற்று வர வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கரோனா பரிசோதனை செய்யாமல் வருபவர்களுக்கு, முகாமிலேயே பரிசோதனை செய்யப்படும். அதன் முடிவுகள் வர 2 நாட்களாகும். அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டும். எனவே, முன் கூட்டியே கரோனா பரிசோதனை செய்து, சான்று பெற்று வருவது சிறந்ததாகும்.
தரகர்களை நம்ப வேண்டாம்
காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், முகாம் நடைபெறும் இடத்துக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குறைவான விலையில் உணவு கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர் களை நம்பி ஏமாற வேண்டாம். உங்களை இடைத்தரகர்கள் அணுகினால், அவர்களது விவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்கவும். இது தொடர்பாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும். அதுமட்டுமின்றி காவல்துறையினர் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப் படுத்தப்படும்.
கரோனா காலத்தில் வேலை இல்லாத நிலையில், இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதிவு செய்துள்ள இளைஞர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சியை செய்து, முகாமில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த் துகள்” என்றார். அப்போது, ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கவுரவ் சேத்தி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT