Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பூசாரிகள் மற்றும் வீரமக்கள் உள்ளிட்டோர் மட்டும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டது.
நேற்று காலை சாரல் மழைக்கிடையே அம்மன் அழைக்கப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது.
அதன் பின்னர், தலைமை பூசாரி ஆனந்தன் தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து வீரமக்கள் மற்றும் காவல் துறையினர் மட்டும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்க முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி குண்டத்தை மூடினர். இதனால் குண்டம் இறங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழாவிற்கு ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் வருகை புரிந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்தாண்டு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
காலை 9 மணி முதல் பக்தர்கள் அம்மன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சிம்ம வாகனத்தில் கொண்டத்து காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (8-ம் தேதி) மாலை தேர்த் திருவிழாவும், நாளை மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 16-ம் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி, சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT