Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
கரூரில் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தையின் பழைய இரும்புக் கடைக்கும் தீவைக்கப்பட்டதால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கரூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஈஸ்வரன் கோயில் பகுதியில் ஹரிஹரனை நேற்று முன்தினம் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக, மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தெற்கு தெருவில் உள்ள மாணவியின் தந்தை வேலனின் பூட்டப்பட்டிருந்த பழைய இரும்புக் கடைக்கு வெளியே கிடந்த பழைய இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவை நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, ஹரிஹரன் மீது தவறு உள்ளதாக கூறப்படுவதை கண்டித்தும், மாணவியிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஹரிஹரனின் சடலத்தை பெற மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி முன் காந்திகிராமத்தில் கரூர்- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு ஹரிஹரனின் சடலத்தை பெற்றுக்கொண்டு ஊர்வலமாக தெற்கு தெருவுக்கு எடுத்துச் சென்றனர். அங்கும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ஹரிஹரனின் சடலம் பாலம்மாள்புரம் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டது.
ஹரிஹரன் கொலை தொடர்பாக மாணவியின் தந்தை வேலன், சித்தப்பா முத்து ஆகிய இருவரையும் கரூர் நகர போலீசார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT