Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை கண்டித்து திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே 2 பேட்டரி குப்பை வண்டிகளை மறித்த டிராபிக் ராமசாமி, லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் இல்லாமல் இந்த வண்டிகளை இயக்கக் கூடாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் குப்பை வண்டிகளை மறித்ததை கண்டித்து தச்சநல்லூர் மண்டலத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து மறியல் கைவிடப்பட்டது.
சென்னையில் மீன்பாடி வண்டிகளை இயக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியும் பெற்றுள்ளேன். டெல்லியிலும் இந்த வண்டிகள் இயக்கப்படவில்லை என்று டிராபிக் ராமசாமி கூறினார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு சென்று, லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் இல்லாமல் குப்பை வண்டிகளை இயக்கக் கூடாது, மீறி இயக்கினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தற்போது இயக்கப்பட்டுவரும் பேட்டரி குப்பை வண்டிகள் 90 சிசி இன்ஜின் சக்தி கொண்டவை. உரிய லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் இருந்தால்தான் இவற்றை இயக்க முடியும். திருநெல்வேலி மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே திருநெல்வேலி சந்திப்பில் துப்புரவு தொழிலாளர்களிடம் தகராறு செய்ததாக டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் நெல்லை தமிழரசு திருநெல்வேலி சந்திப்பு போலீஸில் புகார் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT