Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆய்வு செய்ய வந்த அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டு மானப் பணியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் கே.சி.வீரமணியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் முத்து மண்டபம் பகுதிக்கான பாதை பிரச்சினையை தீர்க்காவிட்டால். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என அப் பகுதி மக்கள் அமைச்சர் வீரமணியை நேற்று முற்றுகையிட்டனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிய பேருந்து நிலையம் அருகே, பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமானப் பணி நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 6,662 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 1,059 இரு சக்கர வாகனங்களையும், 42 கார்களையும் நிறுத்தி வைக்க முடியும். இந்த கட்டிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்நிலையில், வாகன நிறுத்து மிட கட்டிடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையர் சங்கரன், அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்டப் பொருளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுப் பணியில் ஈடுபட் டிருந்த அமைச்சரை, அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அவர்கள், ‘வாகன நிறுத்துமிடம் பகுதி வழியாக பொதுமக்கள் பயன் படுத்தி வந்த பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர். இதை யடுத்து, அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் வீரமணி, ‘முதலில் இங்கு வழிப்பாதை இருக்கிறதா? என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கலாம்’ என்று அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x