Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
உதவி காவல் ஆய்வாளர் கையில் வைத் திருந்த கைத்துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததால், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெகதீசன். இவரும், மற்றொரு உதவி காவல் ஆய்வாளரான ராஜசேகரன் என்பவரும் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணிக்கு சென்ற ஜெகதீசன் பணி முடிந்து வேலூர் வடக்கு காவல் நிலை யத்துக்கு இரவு 11.30 மணியளவில் வந்தார். அப்போது, தனக்கு வழங்கப்பட்டிருந்த 9 எம்எம் பிஸ்டலை (கைத்துப்பாக்கி) சுத்தம் செய்வதற்காக கையில் எடுத்தார். துப்பாக்கியை சுத்தம் செய்ய நாலா பக்கமும் திருப்பியபோது எதிர்பாராதவிதமாக விசை மீது கைப்பட்டு துப்பாக்கி வெடித்தது.
அதிலிருந்து வெளியேறிய குண்டு அங்குள்ள மேஜை மீது பட்டு வடக்கு காவல் நிலைய மேற்கூரையை துளைத்தது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், காவல் நிலையத்தில் இரவுப்பணியில் இருந்த காவலர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது, உதவி காவல் ஆய்வாளர் ஜெகதீசனின் கவனக்குறைவு காரணமாக கைத்துப்பாக்கி வெடித்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் வந்து உதவி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் கூடுதல் எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு டிஐஜி காமினி உத்தரவிட்டார். அதன்பேரில், ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான், துப்பாக்கி வெடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT