Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM

செங்கம் அருகே விஜயநகர ஆட்சி காலத்தில் நீர்மேலாண்மை கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செங்கம் அருகே வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நீர்மேலாண்மைக்கு சான்றாக கிடைத்த கல்வெட்டு. அடுத்த படம்: பெரிய பாறை கல்வெட்டு.

திருவண்ணாமலை

செங்கம் அருகே வாய்விடாந் தாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொது ஆண்டு 14-ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மை குறித்த இரண்டு கல்வெட்டுகள் புதிதாக கண் டெடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுவரை கண்டறியப்படாத புதிய கல்வெட்டுகளை கண் டெடுத்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், முனைவர் சுதாகர், வரலாற்று ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக செங்கம் அடுத்த வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் எட்டி ஏரிக்கு அருகே காளியம்மன் கோயில் மானிய நிலத்தில் ஒரு கல்வெட்டையும், அதே ஊரில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பெரிய பாறையில் மற்றொரு கல்வெட்டையும் புதிதாக கண்டெடுத்துள்ளனர்.

இந்த இரண்டு கல்வெட்டுகளும் பொது ஆண்டு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் விஜயநகர அரசர் குமார கம்பணன் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பால முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘‘புதிதாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளையும் கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் ஆய்வு செய்து படித்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி, ‘விஜயநகர அரசர் குமார கம்பணன் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் கெங்கையாடி, அண்ணாமலை, வீரசிங்கதேவன், கூத்தாடும்பிச்சை, படுவூர் தோட்டி ஆகியோர் முடிவெடுத்து வெட்டும் பிள்ளை ஏந்தல் பாசனத்தில் உள்ள கழனிக்கு வாயலார் ஏந்தல் நீரை குறிப்பிட்ட அளவு நிறுத்தி நல்லன் செறு நிலத்துக்கு பாய வேண்டும். அதற்கு மேல் வரும் நீரை வெளியேற்றிவிட வேண்டும்’ என்று ஒரு கல்வெட்டில் குறிப்பிட் டுள்ளனர். இது நீர் பாசனத்தை ஒழுங்குபடுத்தும் தகவலைக் கூறும் அரிய கல்வெட்டு ஆகும். மேலும், நீரை பயன்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளும் அதனை மேலாண்மை செய்வது குறித்த குறிப்புகளும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், சக ஆண்டு 1279 (பொது ஆண்டு 1357-ல்) வெட்டப்பட்ட மற்றொரு கல்வெட்டில் ‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஆடையூர் நாட்டு கீழ்பற்றில் உள்ள படுவூரில் திருவண்ணாமலையில் உள்ள அணி (அடி) அண்ணாமலை கோயில் திருப்பணிக்கு 100 குழி நிலம் இறையிலியாக (வரியில்லாத நிலம்) விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் அணி (அடி) அண்ணாமலை பரையன் ஏந்தல் என்ற நீர் நிலையும் வெட்டுவித்து அந்த நிலத்தில் நத்தம் நிலத்தை ஏற்படுத்தி குடியும் ஏற்றி ஏரியும் வெட்டுவித்து கிணறும் ஆழப் படுத்திக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டின் மூலம் கூடுதல் தகவலாக தற்போது வாய்விடாந்தாங்கல் என்று அழைக் கப்படும் ஊரின் பெயர் வாயுளான் ஏந்தல் என்றும் அரசந்தாங்கல் என அழைக்கப்படும் ஊரின் பெயர் ஊர் அரசுரடையான் ஏந்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாறையில் உள்ள கல்வெட்டில் திருவண்ணாமலையை குறிக்க முக்கோணம் போன்ற குறியீடும் உள்ளது. இதுபோன்ற குறியீடு உள்ள பல கல்வெட்டுகளை மாவட்ட ஆய்வு நடுவத்தால் ஆவணப்படுத்தப்பட்டு வரு கின்றது. புதிதாக கண்டெடுக் கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும் விஜயநகர காலத்தின் நீர் மேலாண்மைக்கு சான்றாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x