Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் மற்றும் நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தனது ஈரோடு பிரச்சாரத்தின் போது அறிவிப்பு வெளியிட வேண்டுமென அருந்ததியர் இளைஞர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையின் தலைவர் வடிவேல்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியாக விளங்கியவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொல்லான். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில், ஆங்கிலேய படையினரால் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பகுதியில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து பொல்லானுக்கு நினைவுச்சின்னம் எழுப்பினர். அதனை, அனுமதி பெறாமல் கட்டியதாக கடந்த 2017-ம் ஆண்டு வருவாய்த்துறையினர் இடித்து விட்டனர்.
அதே இடத்தில் பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு, ஆடி 1-ம் தேதி அரசு விழா எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த இரு ஆண்டுகளாக பொல்லான் நினைவுநாள் அரசு விழாவாக நடந்து வருகிறது.
பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வரிடம் மூன்று முறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். இதையடுத்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தைத் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். எனவே, ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் முதல்வர், பொல்லான் மணிமண்டபம் மற்றும் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT