Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM
ஈரோடு பாசூரில் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் அதிமுக – திமுக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியனை வரவேற்கும் வகையில், அதிமுகவினர் கட்சிக்கொடிகளைக் கட்டி, அதிமுக ஆதரவு பாடல்களை ஒலிபரப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதியில் திமுகவினரும் கட்சிக் கொடிகளைக் கட்டினர். பொங்கல்பரிசு வழங்கும்போது எம்.ஜிஆர் பாடல் ஒலித்த நிலையில், அதனை நிறுத்துமாறு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை வீசி, மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தடுக்க முயன்ற மலையம்பாளையம் எஸ்.ஐ. வரதராஜனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட பாசூர் தொடக்க கூட்டுறவு வங்கி இயக்குநர் கோபால்ராசு, பாசூர் திமுக செயலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி தலைவர் சக்திவேல், திமுக நிர்வாகி பழனிசாமி, ரங்கசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT