Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜவுளி தொழிலில் புதிய சகாப்தம் ஏற்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈரோடு

திமுக ஆட்சிக்கு வந்தால், ஜவுளித்தொழிலுக்கு ஆதாரமான நூலைப் பதுக்கி, விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெருநிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று காலை கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சி யில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், எல்லப்பாளையம் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வெள்ளோடு குமாரவலசு ஊராட்சி யில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.

கூட்டத்தில், கைத்தறி நெசவாளர் கூலியை உயர்த்த வேண்டும், காப்பீடு செய்ய வேண்டும், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும், விளை நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.

இயற்கை வேளாண் விவசாயி அறச்சலூர் செல்வம் பேசும்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் ஒப்பந்த சட்டம், இயற்கைக்கு விரோதமான கால்நடை இனப்பெருக்கச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் வருமானம், கடன் நிவாரணம் தொடர்பாக கமிஷன் அமைக்க வேண்டும். தமிழக அரசே காப்பீடு நிறுவனம் அமைக்க வேண்டும், என்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்திற்கு மக்கள் பணி என்றால் பிடிக்காது. நில அபகரிப்பு, மாமூல் வாங்குவதுதான் பிடிக்கும். இதனால் தான், ஜெயலலிதா இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.

நூல் விலை உயர்வால் ஈரோட்டில் ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. பஞ்சின் விலை உயராதபோது, நூலின் விலை மட்டும் உயர்ந்து வருகிறது. பெரு நிறுவனங்கள் நூலைப்பதுக்குவதுதான் நூல் விலை உயர்வுக்கு காரணம். திமுக ஆட்சியில் இவ்வாறு நுலைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஜவுளி உற்பத்தியில் புதிய சகாப்தம் உருவாக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x