Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

‘விபத்தில்லாத புத்தாண்டு’ கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம்தேதி இரவு, பொதுமக்கள் சாலைஉள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் ஒன்று கூடி, கேக் வெட்டி யும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டை வரவேற்று மகிழ்வர். இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் உற்சாகமாக வலம் வருவர். விதிகளை மீறும் இளைஞர்களால், டிசம்பர் 31-ம் தேதி இரவு முதல் ஜனவரி 1-ம் தேதி அதிகாலைக்குள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துவிடும். சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்படுவது உண்டு.

இதை தடுக்க, மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். மதுபோதையிலும், அதிவேகமாகவும் வரும் வாகன ஓட்டுநர்களை பிடித்து அறிவுரை வழங்கி, சில மணி நேரங்களுக்கு பின்னர் அனுப்பி வைப்பர்.

இந்நிலையில், நடப்பாண்டு கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, பொதுஇடங்களிலும், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், கிளப்புகள் உள்ளிட்ட இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்தது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் 1,200 போலீஸாரும், மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் 800 போலீஸாரும் 31-ம் தேதி மாலை முதல் நேற்று மதியம் வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் வந்த சிலரை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல், விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘கடந்த 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாநகரில் 6 உயிரிழப்பு விபத்துகளும், 4 சாதாரண விபத்துகளும், 2020-ம் ஆண்டு ஒரு உயிரிழப்பு விபத்தும், 3 சாதாரண விபத்துகளும் ஏற்பட்டன. நடப்பாண்டு ஒரு விபத்து வழக்கு கூட பதிவாகவில்லை’’ என்றார். இதேபோல, மாவட்டம் முழுவதும் ஒரு விபத்துகூட நிகழவில்லை என மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் மாநகர் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் புத்தாண்டு கொண்டாடபல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட் டன. சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, “திருப்பூர் மாநகரிலும், மாவட்டத்திலும் புத்தாண்டு பிறந்த நள்ளிரவில் சிறு விபத்துகள்கூட நிகழவில்லை. விதிமீறல்வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை” என காவல்துறை யினர் தெரிவித்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவை கோனியம்மன் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x