Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு பிடிஓ அலுவலகங்களை முற்றுகையிட்ட பாமகவினர்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இருந்து பேரணியாக சென்ற பாமகவினர். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர். கடைசிப் படம்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பிடிஓ அலுவலகங்களை பாமகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி மற்றும் மனு கொடுக்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் பேரணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக ஒன்றியச் செயலாளர்கள் ஜலகண்டேஸ்வரன், ஜெய்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். முன்னதாக, துணை செயலாளர் சரவணன் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, அண்ணா கலையரங்கம் அருகே தொடங்கிய பேரணியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வேலூர் பிடிஓ அலுவலகம் நோக்கிச்சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க பாமகவினர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, அங்கு வந்த காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிய மனுவை பிடிஓ கனகவல்லியிடம் பாமக நிர்வாகிகள் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம் பள்ளி மற்றும் திருப்பத்தூர் பிடிஓ அலுவலகங்களில் பாமக சார்பில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு பாமக நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பிடிஓக்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் பாக இட ஒதுக்கீடு கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, பாமக மாநில தேர்தல் பிரச்சாரக்குழு தலைவரும் முன் னாள் சட்டப்பேரவை உறுப்பின ருமான கோ.எதிரொலிமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றவர்கள் கோரிக் கையை வலியுறுத்தி முழக்கமிட்ட துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனிடம் இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்தனர்.

அதேபோல், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

ஆரணியில் பாமக ஒன்றிய குழு துணைத் தலைவர் வேலாயுதம் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இட ஒதுக்கீடு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்தனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பாமகவினர் இட ஒதுக்கீடு கோரும் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x