Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM

தென்காசி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., தேர்தல் பிரச்சாரம்

வாசுதேவநல்லூரில் வயலில் வேலை பார்த்த பெண்களுடன் கனிமொழி எம்.பி., கலந்துரையாடினார்.

தென்காசி

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தென்காசி மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். கரிவலம்வந்தநல்லூரில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

கோமதிமுத்துபுரம் நூலகத்து க்கு சென்று வாசகர்களிடம் உரையாடினார். ராயகிரியில் திமுக கொடியேற்றி வைத்து, அப்பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடினார். வாசுதேவநல்லூரில் நெற்பயிருக்கு களையெடுத்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.

பின்னர் சிவகிரியில் சுயஉதவிக் குழுவினர் மத்தியில் பேசும்போது, “கரோனா காலத்தில் சுயஉதவிக் குழுவினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடனுதவி, சுழல்நிதி வழங்கப்படவில்லை. சிலர் தனியாரிடம் கடன் வாங்கி, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டனர். பொது கழிப்பிடம், பள்ளி வகுப்பறை, நூலகம் போன்ற வசதிகளை எம்.பி., நிதியில் இருந்து கட்டிக் கொடுக்க ஆசை தான். ஆனால், கரோனாவை காரணம் காட்டி பாஜக அரசு எம்.பி., நிதியை நிறுத்திவிட்டது. மக்களுக்கு பயன்படக்கூடிய நிதியை நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

மத்திய அரசின் தவறுகளை தட்டிக்கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்த தைரியமும் இல்லை. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ சுயஉதவிக் குழுக்களை கருணாநிதி உருவாக்கினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சுயஉதவிக்குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இரவில் கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x