Published : 30 Dec 2020 03:19 AM
Last Updated : 30 Dec 2020 03:19 AM
வேலூரில் மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் இணை ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இயங்கி வருகின்றன. இதன் இணை ஆணையராக விமலா (42) உள்ளார். இவர், பொது நிர்வாகம் நுண்ணறிவு பிரிவையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இணை ஆணையர் விமலா பரிசுப் பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இணை ஆணையர் அலுவலகத்தை நேற்று கண்காணித்தனர்.
அப்போது, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங் களில் இருந்து உதவி ஆணை யர்கள், ஆடிட்டர்கள் மற்றும் அவர்களின் அலுவலக பணி யாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கான பயிற்சி நடைபெறுவது தெரியவந்தது. பயிற்சியின் முடிவில் உதவி ஆணை யர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து புத்தாண்டு பரிசுப் பணம், சால்வை, பழங்கள், இனிப்புகள், புத்தாண்டு டைரிகளையும் வாங்கியுள்ளார்.
இந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை யினர் இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்த நிலையில், இணை ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT